எதிர் எதிர்க் கரைகளில்
மெளனமாய்
ஒதுங்கும் படகுகள்
அலைகளின் ஆரவாரம்
மட்டும்
ஆழமாய் எங்கள் மனங்களில்
விழிகள்
வியந்து கொண்டிருக்கும்
ஊமை நாடகத்திற்க்கு
இசை கோர்த்துக் கொண்டிருக்கும்
இதயங்கள்
பால பாடம் முதல்
பால்ய பாடங்கள் வரை
ஒன்றாய் படித்தவர்களாக மட்டுமே
ஊர் அறியும்
ஒளிந்து வளர்ந்த
எங்கள் காதல் மட்டும்
ஒரு பட்ச்சிக்கேனும்
பரிட்ச்சயத்திலில்லை
உடன் படிக்கைகளால்
உடைந்த சமூகம்
வர்க்க பேதங்களும்
வாழ் வியலும்
வரிந்து கட்டி வளர்த்த
எதிர் எதிர்ப் பார்வை
இருபது வருட இடைவேளைக்குப் பின்
தொடரத் துடிக்கின்ற
துரதிர்ஸ்டக் காவியம்
இன்று
ஒற்றைக் கூரையின் கீழ்
உத்தியோகத்தர்களாய்
உலாவரும் கோரம்
நாளொன்றின் பெரும் பொழுதுகள்
நகர்வது உன்னோடுதான்
உன்
உடையின் முடிவில்
ஊஞ்சல் கட்டி ஆடும்
என் மனம்
உன்னையும் என்னையும்
தலைவியாய்த் தலைவனாய்
வெவ்வேறு தர்பார்களில்
பொருத்திப் போற்றும்
சுற்றம்
இடுக்குகள் தேடி
இழையும்
ஈரத்தின் பயணம் போல்
அநாவசியப் பார்வைகளால்
அடிக்கடி ஒருவரையொருவர்
அழையும் நாம்
மெளனமாய் அசைவுகளும்
இதயங்களோடு இசையுமாய்
எமது வாழ்க்கை
இன்னமும் விரியும்
ஏனெனில்
அலுவலகம் முடிந்த
அடுத்த சில மணிகளில்
நீ உன் கணவனிடமும்
நான் என் மனைவியிடமும்
சந்நிதி திரும்ப வேண்டும்.
August 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment