September 3, 2010

கொல்லும் மன சாட்சி

அன்றொரு நாள்

எனக்குப் பதினெட்டு
என் மூத்தவர்க்கோ
பல நூற்றாண்டு

அடி முடி அறியப்படாத மொழி
அனைத்துப் பிரபஞ்ச‌
உயிர்களுக்கும்
ஒரு படி
முன்னோடி

மொத்தத்தில்
தமிழ் என்பதற்க்கு
ஒரு பொருள் பொதிவு
மட்டுமல்ல‌
உள்ளதே இங்கே
ஓராயிரம் உட் பொருட்கள்

எப்படி மறந்தேன்
எதற்க்காய் மறுத்தேன்
எந்தையும் தாயும்
கொஞ்சிக் குலாவிய
தேசம்
பாட்டனும் பாட்டியும்
பக்குவமாய் வளர்த்த
பாரம்பரியம்

சில பத்திருபது ஆண்டுகள்
சிரித்தழுது போகும்
இந்த
உயிர் காப்பதற்க்காய்
திட்டமிட்ட
சதிகளுக்கிணைய
எப்படி
திசைகளின்றிச் சிதறினேன்

மண் துறந்து வந்ததற்க்கு
மக்கியதாய்
பல காரணங்கள்
கடல் கடந்து வாழ்வதற்க்கு
என்னிடம்
கச்சிதமாய்ச்
சில வாதங்கள்

திருடு போன
என் இளமையும்
சகாப்தமாய் ஆன
என் சகாக்கள் உயிர்களும்
எதிர் எதிர்க் கண்டங்களில்
முன்னது அகதியாயும்
பின்னவர்கள் மாவீரர்களாயும்

தீர்க்கதரிசனமென்று
தினவாகச் சொல்லியுள்ளேன்
உயிர்ப் பயத்தால்
உதறி வந்தேன் என்பதை
என் உள்ளம்
மட்டுமே அறியும்

போனவை
போனவையாகட்டும்
புரையேறிய பொய்களாய்

காலங்கள் கனிந்து வந்தனவே
அப்பொழுதும்
என் கடமையில்
உண்மை
ஏன்
உள்ளபடி இருக்கவில்லை?

அப்பொழுதோ
உதிர்ந்து விடும்
இந்த
உயிர் காப்பதற்க்காய்
இப்பொழுதோ
எப்பொழுதேனும்
கூடிய
இந்த
இருப்பை
பத்திரப்படுத்துவதற்க்காய்

கடல் கடந்து
வந்து அன்று
அடக்கி ஆண்டவர்கள்
இன்று எம்மை
கண்டங்கள்
தாண்டிக் கொணர்ந்து
கட்டுக்குள் வைத்து
ஆள்கிறார்கள்

மேற்குலகும்
மேதாவிகளும்
சுழலும் பொருளாதாரத்திற்க்காய்
சூழ்ச்சிகள் செய்து
என்னைப் போன்றவர்களை
சுற்றிப் பின்னிய வலை

விளக்கெரிக்குமென்று
தெரிந்தே
வீழ்ந்து விட்ட
விட்டில்களில்
நானும் ஒருவன்

உச்சக் கட்டப்
போரிலாவது
நான்
ஒரு கல் சுமந்திருக்கலாம்
மாறக
இங்கே
அறு சுவை உண்டு
அரைத்தூக்கம் கொண்டவர்களோடு
என்னையும்
இணைத்துக் கொண்டேன்

கொல்கிறதே மன சாட்சி
எப்பொழுதும் போகும்
என் உயிருக்காய்
இக்கணமும்
சந்தேகத்திற்க்கிடமான
இந்த
இருப்பிற்க்காய்
இழக்கக் கூடாதவற்றையெல்லாம்
இழந்து

நான் மட்டுமல்ல
என்னைப் போன்ற பல
நாங்கள்
நாட்டை விட்டு வந்ததே
நடந்திருக்கக் கூடாத தவறு.

No comments:

Post a Comment