ஆசீர்வாதமா? சாபமா?
அலைகள் அடித்திருக்கும்
ஊரில்ப் பிறந்தும்
ஆரவார உறவுகளின்
அரவணைப்பில் வளர்ந்தும்
ஆளில்லா தேசத்தில்
ஒற்றை மரமாய்
தவமாய்ப் பெற்ற
மகனாய் இருந்தும்
தாயின் மடியும்
தந்தையின் தோள்களும்
தழுவியதானதாய்
வளமான வளர்ப்பிருந்தும்
தறிகெட்ட வாழ்க்கையின்
தத்துப் பிள்ளையாகி
உரிமை கொண்டாட
உறவுகள் இருந்தும்
பகிர்ந்துண்ண பக்கத்தில்
பக்குவமாய்த்
துணை இருந்தும்
தனிமை நெஞ்சமிது
ஊமைக் காயத்துடனாய்
முற்றுப்புள்ளிகளற்ற
கேள்விப் பயணத்தில்
ஆரம்பம் முடிவுபற்றிய
அறியாமையில் அழுந்தி நின்றும்
விடைகள் விசாரிக்கின்ற
விரும்பத்தகா மனிதனாய்
இந்த இருப்பு
ஆசீர்வாதமா? சாபமா?
இது பாதி இதுவும் பாதியாய்
எந்தப் பாதியில்
இந்த நிமிடமென்பது தான்
என்னுள்
வேள்வியாய் எரியும்
விடை காணாக் கேள்வி?
August 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment