August 25, 2010

மெளனமாய் ஒரு நாடகம்

விழிகள் மூடியபடி
வெற்றுப் பார்வையில்
இவர்கள்
பங்காளர்கள்
இப்பொழுது
பார்வையாளர்களாய்

சர்வ அடங்கல்களுடன்
சர்வமே தஞ்சமாய்
இது இது
நடக்கும் என்ற‌
இரும்பு மனம் தகைந்து
எதுவும் நடக்கும்
என்ற
இயலாமை
விழித்தெழுந்து

படியளத்தல் மட்டுமா
படைத்தவன் செய்கின்றான்
அடுத்தகணத்தின் இருப்பிற்கும்
அவனிடமே இருக்கும்
சுருக்கு

தருவது போல்த் தந்து
எடுப்பது போல் நாடகமாடி
அச்சம் தவிர்
தன்னைச் சரணடை
கணம் தவறாத‌
கற்ப்பித்தல்

எது உண்மையென்று
அறிந்த‌
இறைவனை உணர்ந்த மனிதம்
இல்லையில்லையென்று
சக மனிதத் திறமையில்
சரணடைந்திருக்கும்
மனிதன்

மனிதமும் மனிதனும்
முட்டி மோதுகையில்
ஒன்றுக்குள் ஒன்றாய்
அந்த ஒருவனிடமே
யாசிக்கும் தஞ்சம்

இதன் முடிவு தெரிவதற்குள்
இவன்
முடிவு வ‌ந்து விடலாம்
அப்பொழுதும்
நாட‌க‌த்தின் த‌லைவ‌னுக்கே
அந்த‌ நாலும்
தெரிந்திருக்கும்.

No comments:

Post a Comment