மரணம்
வாழும் மனிதர்கள்
தங்கள்
வாழ்க்கை நெறிகளை
மறு பரிசீலனை
செய்ய வேண்டி
மறைந்தவர்கள் அடிக்கும்
எச்சரிக்கை மணி
சங்கீதக்
கதிரைச் சுற்றில்
களவாடப்பட இருக்கும்
கடைசி இருக்கைக்கான
போட்டி
நீயா நானா
முந்திக் கொள்வது யார்
உறவுகள் ஒன்றையொன்று
உள் விசாரணை செய்து கொள்ளும்
நேரம்
வாழ்ந்தவர்கள் மறைகையில்
அழுகை
வெறும்
அரிதார ஆரம்பம்
அடுத்தது என்பதுதான்
கடிதான கலவரம்
எல்லா மரணங்களுமே
வாழ்க்கை பற்றிய விசாரணைகளோடு
வழக்குகள் தொடுப்பதில்லை
ஆயினும்
எந்த மரணமும்
எவர் ஒருவரையாவது தொட்டிருக்கும்
இது
எந்த உறவுக்கும்
விதிவிலக்கில்லை
இவைகளெல்லாம் கடந்து
ஒரு மனித மரணம்
மனிதத்தின் மரணமாகுமெனில்
ஒரு
ஊரையே உலுக்குமெனில்
வாழ்ந்து விட்டுச் சென்ற
வாழ்க்கையின் அர்த்தம்
வானிருக்கும் வரை
எஞ்சி நிற்க்கும்
இங்கேயும்
ஒரு மரணம்
என்
உறவின் உறவு என்று
என்னை
உற்றுப் பார்க்க வைத்த
மரணம்
செய்தி செவிகேட்டு
சாரி சாரியாய் வந்தார்கள்
வயது பேதமின்றி
வணங்கினார்கள்
சற்றே மீறப்பட்ட
சராசரி வழமுறைகள்
அயல்வீடு பற்றிய
சுக துக்கங்களை
அடுத்தவர்களெல்லாம்
செல்பேசிகளிலும்
இலத்திரனியல் அஞ்சல்களிலும்
விசாரணை செய்து கொண்டிருக்க
இங்கேயோ
கடல் கடந்து
வந்தார்கள்
கடைசி
கடைசியாய்
ஒரு தடவையென்று
கண்ணீரோடு
வந்தார்கள்
பதவிகள் எதுவுமின்றியே
பலர் நெஞ்சங்களில்
நீ
செய்து விட்டுச் சென்ற
ஆட்சி
அதற்க்கு
இந்த
உற்றார் உறவுகளின்
உணர்வு பூர்வ
அஞ்சலியே
சாட்சி
உன்
சகோதரர்களின்
நண்பர்களுக்கும்
நீ
சகோதரி
உந்தன்
குழந்தைகளின்
குழாமுக்கும்
நீ
ஒரு தாய்
ஒற்றைச் சொல்
பதிலோடு
வெட்டிவிடத் துடிக்கின்ற
மூத்த தலைமுறையினரிடையே
இரு கரங்கள் விரித்து
நீ
இவர்களை அரவணைத்திருக்கிறாய்
பசியின்றி வருபவர்க்கும்
உன் வீட்டில் உண்டு
உணவும் உபசரிப்பும்
நல்லதாய் கெட்டதாய்
எவர் வீட்டில்
எது நிகழ்கையிலும்
உன்
பிரசன்னம் இருக்கும்
பாகுபாடுகள் இன்றிய
பங்களிப்பு
உன்
பரந்த உள்ளத்தின்
வெளிப்பாடு
எங்கனம் மறப்போம்
இந்த உறவை
அஞ்சலிகளோடு
மட்டுமே முடிந்து விட
ஆயிரத்து ஒன்றல்ல
இது
ஆயிரத்தில் ஒன்று
உன்னை
தந்ததற்காய்
இறைவனுக்குக்கு
நன்றியாயும்
நீ
எங்களுடன்
வாழ்ந்ததற்காய்
உனக்கு எங்கள்
அஞ்சலியாயும்
இனி
வாழப் போகின்ற
எம் வாழ்க்கையை
நாம்
அர்த்தப்படுத்தி
அழைத்துச்செல்வோம்
அதுவே
நாம் உனக்குச் செய்யும்
நினைவாஞ்சலி
December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் நன்றாக இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
கமலேஷ் உங்கள் தொடர் ஊக்கப்படுத்தலுக்கு நன்றி.
ReplyDeleteஅவதானி
உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஇப்படிக்கு தேடல்.