December 11, 2009

சொல்லாமலே!

அந்த வருடம்
அந்த நாள்
நீ
மறந்திருக்கக்கூடும்

வெப்பச் சூரியனின்
விரல் விளையாட்டில்
கொதித்துப் புகையும்
பூமியில்
ஒரு மதியப் பொழுது

வியர்வைக் குளியலில்
நனைந்தபடி
நீயும் நானும்
கல்லூரிப் படிகளில்
சாய்ந்திருந்தோம்

அதிகமாய் பேச்சுக்கள் இல்லை
ஏன்
பேசிக் கொள்ளவே
இல்லை எனலாம்
எனக்குப்
பேச்சு மட்டுமல்ல‌
மூச்சுமில்லை

திசை திரும்பியிருந்த‌
உன் முகத்தையே
விழிகளசைவின்றி
நான்
வியந்து கொண்டிருந்தேன்

என்னை உனக்குத்
தெரிவிக்கச் சொல்லி
இரைந்து கொண்டிருந்தது மனம்
சுற்றம் சூழல்
உறவுகள் பார்த்து
சும்மா இரு என்றது
புத்தி

இதயமும் மூளையும்
இட்டுக் கொண்ட‌
சண்டைகளில்
இளைத்துக் குறுகியது
என் உடல்தான்

அதன் பின்
இன்று
மூன்று வருடங்களை
முழுதாய்க் கடந்த பின்னும்
நான் கட்டிய கனவுகளை
உன் காதுகளில்
போடமுடியவில்லை

உன்னைப் பார்த்த பின்பு தான்
பூமி என்ற இந்த‌
பெரும் பரப்பு
ஒரு பெரிய‌
பொருள் படர்ந்த‌
ஓவியம் என்பதைக்
கண்டு கொண்டேன்

கண்கள் பதிக்காமல்
நான் தினம்
கடந்து செல்லும்
பெயர் தெரியாத‌
அந்தப் பெரிய மரமதை
நாணித் தலைகுனியும்
கர்ப்பிணிப் பெண்
ஒருத்தியாய்
நான்
கண்டு கொண்ட பொழுதில்
உன்னையே அதன்
காரணமாய்
உவகை கொண்டேன்

விளக்குக் கம்பங்கள் கூட‌
வித்தியாசங்கள் காட்டின‌
ஒளிர்ந்தவைகள்
உள்ளவர்களாயும்
இருண்டவர்கள்
ஏங்குபவர்களாயும்
எங்கும்
எதிலும்
அர்த்தப் பூக்களே
அர்ச்சனைகள் செய்தன‌

இரைச்சல்களில்
நகருகின்ற‌
இந்த நகரமும்
இசைக் கருவிகள்
பல சேர்ந்த‌
கூட்டு முயற்சியென்று
எனக்குக்
குறிப்புத் தந்தவளும்
நீ தானே

உப்புக்க‌ரிக்கும்
க‌ட‌லுக்கும்
ம‌திய‌ங்க‌ளில்
ஒரு
ம‌ல‌ர்ச்சி உண்டு
க‌ரும் பாறைக‌ளை
முட்டி வ‌ரும் காற்று
க‌ட‌ல் நீரோடு
க‌ல‌க்கையில்
காத‌லாய் ஒரு
வாச‌ம் விளைகிற‌தே
அதை என்னை
வாசிக்க‌ வைத்த‌வ‌ளும்
நீதானே

அந்த வருடம்
அந்த நாள்
நீ மறந்திருக்கக் கூடும்
அந்தச்
சம்பவச் சலனமின்றி
சங்கீதமாய் எங்கேனும்
நீ
சஞ்சரித்துக் கொண்டிருக்கவும்
கூடும்

இப்பொழுதும்
மதியங்கள்
என்னைக் கடந்தபடிதான்
உள்ளன‌
வியர்வைக் குளியல்களும்
என்னை வெறுத்து
விலகவில்லை
ஆயினும்
அன்று தவறியதை
இன்று சொல்லி வைக்க‌
நீ மட்டும்
இங்கே இல்லை.

2 comments:

  1. நல்ல கவிதை...


    எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    ReplyDelete