ஒரு சகோதரியாய், தாயாய் தன் வாழ்நாள் முழுவதும் தன் குடுமபத்துக்கும் அதனை சார்ந்தவர்களுக்குமாய் தன் வாழ்க்கையை அர்பணித்த ஒரு பெண்மணியின் இறுதி சடங்குகளின் பொழுது படிக்கப்பட்ட கவிதாஞ்சலி.
ஒரு தலைமுறைக்கு
வழங்கப்பட்ட வரம்
உன் வருகை.
தாய்மையுடன் தாய் ஒரு
சம்பவம்
தாயாகவே ஒரு தமக்கையார்
அது சரித்திரம்.
கட்டமைப்புகளின்
உறுதியில்
வாழ்க்கை இனிக்கும்
தாய் தந்தை என்ற
தூண்கள்
தவிக்க விட்டு
மறைந்து போனால்
வானம் பார்த்த பூமியாய்
வாழ்வு தொக்கி நிற்கும்.
உன் பருவ வயதில்
உன் முன்னாலும்
கிழித்துப் போடப்பட்ட
எதிர்காலம்
அதை ஒட்டுப் போட
முயன்ற உன்னை
ஊர் பார்த்த பார்வை
பரிதாபம்.
நீ
சுயநலச் சுருக்குகளினுள்
சிக்கியிருந்தால்
இன்று
ஊர் போற்றும்
உன் செல்வங்கள்
யார் யாரோ
எங்கேயோ
எவருக்குத் தெரியும்.
உன் உடன் பிறப்புக்கள்
பிள்ளைகள்
அதன் வம்சங்கள்
அதிஸ்டக்காரர்கள்
வலிகளுடனும்
வாழ்க்கையுடனான
யுத்தங்ளுடனும்
நீ நிலாப்பாட்டுப் பாடி
சோறூட்டியிருக்கிறாயாம்
எனக்குத் தெரியும்
என் வீட்டிலும்
உன் வளர்ப்பில் வந்த பிள்ளையொன்று
எனக்குச்
சிறப்புச் செய்கிறது.
சில பல
பத்து ஆண்டுகளுக்கு முன்
உன் சகோதர சகோதரிகளை
தாய் தகப்பனை விழுங்கியவர்கள் என்றார்களாம்
உண்மையை இன்று தான்
ஊரறியும்.
அவர்கள் தாயை
இழந்தது அப்பொழுதிலல்ல
இப்பொழுதுதான்.
நீ கடவுளால்
பூமியில் வீசப்பட்ட
விதை
ஆல மரமானாய்.
உன் விழுதுகள்
வளர்ந்தன.
அந்த விழுதுகளுக்கும்
இன்று வேர்கள்.
இனி அந்த
வேர்களிலிருந்தும்
விருட்சங்கள்.
இனி வரும்
தலைமுறையிலும்
என்றென்றும்
உன் பெயர்
இருக்கும்.
உன் வருகைக்கும்
அந்த வருகையினால்
இந்த வாழ்க்கைக்கு
நீ
செய்து விட்டு சென்றுள்ள
பெருமைகளுக்கும்
என்றென்றும் நன்றி.
போய் வா தாயே!!!!.
December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment