December 23, 2009

காத்திருப்பு

இதயத்துப் பரவசம்
இதழோரப் புன்னகையில்
ஞாபக நினைவுகள்
விழியோரக் கவிதையில்

இமைகள் மூடியபடி
இறுகி இருப்பதுண்டு
மூடி வைத்த விழிகளுக்குள்
உன்
முகம் பார்த்து முகம் பார்த்து
காதல் எனும்
கடுந் தீயில்
நான்
கரையின்றிக் கரைவதுண்டு

மனித சஞ்சாரம்
மறுத்த‌
ஒரு மலைப் பிரதேசம்
விஞ்ஞான விந்தைகள்
துறந்த‌
மஞ்சள் நிறத்து
மாலைப் பொழுது
சில‌
விண் முகில்களின்
கண்ணசைப்பில்
உன்
விபரம் கேட்டேன்
நீ
உறங்குவதாய்ச்
சொல்லின அவை

உனக்கு உறக்கம்
என‌க்கோ
எப்பொழுதும்
ஊன் உறக்கமின்றி
உன்னையே எண்ணிய‌
மயக்கம்

முதியவனின்
உள்ளங்கைகளைப் போல்
ஏராள மடிப்புகளுடன்
என் இதயம்
அதன்
ஒவ்வொரு மடிப்பிலும்
ஒளித்திருக்கும்
உன் உருவம்
எப்பொழுது
கலையும்
உன் உறக்கம்
இங்கே கிடைக்குமா
எனக்கு வெளிச்சம்
காத்திருக்கிறேன்.

December 20, 2009

நினைவாஞ்சலி

மரணம்
வாழும் மனிதர்கள்
த‌ங்கள்
வாழ்க்கை நெறிகளை
மறு பரிசீலனை
செய்ய வேண்டி
மறைந்தவர்கள் அடிக்கும்
எச்சரிக்கை மணி

சங்கீதக்
கதிரைச் சுற்றில்
களவாடப்பட இருக்கும்
கடைசி இருக்கைக்கான‌
போட்டி
நீயா நானா
முந்திக் கொள்வது யார்
உறவுகள் ஒன்றையொன்று
உள் விசாரணை செய்து கொள்ளும்
நேரம்

வாழ்ந்தவர்கள் மறைகையில்
அழுகை
வெறும்
அரிதார ஆரம்பம்
அடுத்தது என்பதுதான்
கடிதான கலவரம்

எல்லா மரணங்களுமே
வாழ்க்கை பற்றிய விசாரணைகளோடு
வழக்குகள் தொடுப்பதில்லை
ஆயினும்
எந்த மரணமும்
எவர் ஒருவரையாவது தொட்டிருக்கும்
இது
எந்த உறவுக்கும்
விதிவிலக்கில்லை

இவைகளெல்லாம் கடந்து
ஒரு மனித மரணம்
மனிதத்தின் மரணமாகுமெனில்
ஒரு
ஊரையே உலுக்குமெனில்
வாழ்ந்து விட்டுச் சென்ற‌
வாழ்க்கையின் அர்த்தம்
வானிருக்கும் வரை
எஞ்சி நிற்க்கும்

இங்கேயும்
ஒரு மரணம்
என்
உறவின் உறவு என்று
என்னை
உற்றுப் பார்க்க வைத்த‌
மரணம்

செய்தி செவிகேட்டு
சாரி சாரியாய் வந்தார்கள்
வயது பேதமின்றி
வணங்கினார்கள்

சற்றே மீறப்பட்ட‌
சராசரி வழமுறைகள்
அயல்வீடு பற்றிய‌
சுக துக்கங்களை
அடுத்தவர்களெல்லாம்
செல்பேசிகளிலும்
இலத்திரனியல் அஞ்சல்களிலும்
விசாரணை செய்து கொண்டிருக்க
இங்கேயோ
க‌டல் கடந்து
வந்தார்கள்

கடைசி
கடைசியாய்
ஒரு தடவையென்று
கண்ணீரோடு
வந்தார்கள்

பதவிகள் எதுவுமின்றியே
பலர் நெஞ்சங்களில்
நீ
செய்து விட்டுச் சென்ற‌
ஆட்சி

அதற்க்கு
இந்த‌
உற்றார் உறவுகளின்
உணர்வு பூர்வ‌
அஞ்சலியே
சாட்சி

உன்
சகோதரர்களின்
நண்பர்களுக்கும்
நீ
சகோதரி
உந்தன்
குழந்தைகளின்
குழாமுக்கும்
நீ
ஒரு தாய்

ஒற்றைச் சொல்
ப‌திலோடு
வெட்டிவிட‌த் துடிக்கின்ற‌
மூத்த‌ த‌லைமுறையின‌ரிடையே
இரு க‌ர‌ங்க‌ள் விரித்து
நீ
இவ‌ர்க‌ளை அர‌வ‌ணைத்திருக்கிறாய்

பசியின்றி வருபவர்க்கும்
உன் வீட்டில் உண்டு
உணவும் உபசரிப்பும்
நல்லதாய் கெட்டதாய்
எவர் வீட்டில்
எது நிகழ்கையிலும்
உன்
பிரசன்னம் இருக்கும்
பாகுபாடுகள் இன்றிய‌
பங்களிப்பு
உன்
பரந்த உள்ளத்தின்
வெளிப்பாடு

எங்கனம் ம‌ற‌ப்போம்
இந்த‌ உற‌வை
அஞ்ச‌லிக‌ளோடு
ம‌ட்டுமே முடிந்து விட‌
ஆயிர‌த்து ஒன்ற‌ல்ல‌
இது
ஆயிர‌த்தில் ஒன்று

உன்னை
தந்ததற்காய்
இறைவனுக்குக்கு
நன்றியாயும்
நீ
எங்களுடன்
வாழ்ந்ததற்காய்
உனக்கு எங்கள்
அஞ்சலியாயும்

இனி
வாழப் போகின்ற‌
எம் வாழ்க்கையை
நாம்
அர்த்தப்படுத்தி
அழைத்துச்செல்வோம்
அதுவே
நாம் உனக்குச் செய்யும்
நினைவாஞ்சலி

December 14, 2009

உன் கண்ணில் நீர் வழிந்தால்

சில முழுக்கதைகளை விட
அதன் முன்னுரைகள்
மூச்சு முட்டவைக்கும்
சில முன்னுரைகளை விட‌
அடுத்ததாய் வரும் என்னுரைகள்
இதமான இழைவு தரும்

இங்கே நான் என்ற‌
என் கதையில்
எனக்கு, முன்னுரை தந்தவளும் நீதான்
என்னுரையானவளும்
நீதான்

கடல் போல்த் தவித்தவனை
கங்கையாய்த்
தவழ வைத்தாய்

ஆலாய்ப் பறந்தவனை
அரணாய்
அணைத்து நின்றாய்
நெருப்பாய்க் கனிந்தவனை
சுடராய் சுமந்து நின்றாய்
கனவுகளில் கலைந்தவனை
நிஜங்களில் நிற்க வைத்தாய்

வண்ணங்கள் ஏழுதான்
ஓவியக்காரன் தானே அற்புதமானவன்
சொற்களும் ஆயிரமாயிரம்தான்
கதையாய்ப் புனைபவனே
காவியக் காரனாகிறான்

ஒற்றையடிப் பாதையில்லை
வாழ்க்கை
ஒருவர்பின் ஒருவர்
பாதச் சுவடுகள் பற்றி
பயணம் செய்வதற்கு

அகண்டு விரிந்திருக்கிறது
உலகம்
வா அருகருகே கைகோர்த்து
அளவளாவிச் செல்வோம்
இருவரும்

சொல்லித்தந்தவள்
நீதானே
இதைச் சொல்லி மகிழ்வதில்
எனக்கென்ன தயக்கம்

என் சிரிப்பில் நீ சிரித்து
நான் அழுதால் எனை அணைத்து
இணைவாய் இருந்தவளே
இன்று மட்டும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
இந்த‌
உள்ளம் பொறுத்திடுமா சொல்

துயரம் துறந்துவிடு
தோழமை நெருங்கி விடு
நீண்டு தெரிகிறது பாதை
வா
தொடர்ந்து செல்வோம் பயணம்....

December 11, 2009

சொல்லாமலே!

அந்த வருடம்
அந்த நாள்
நீ
மறந்திருக்கக்கூடும்

வெப்பச் சூரியனின்
விரல் விளையாட்டில்
கொதித்துப் புகையும்
பூமியில்
ஒரு மதியப் பொழுது

வியர்வைக் குளியலில்
நனைந்தபடி
நீயும் நானும்
கல்லூரிப் படிகளில்
சாய்ந்திருந்தோம்

அதிகமாய் பேச்சுக்கள் இல்லை
ஏன்
பேசிக் கொள்ளவே
இல்லை எனலாம்
எனக்குப்
பேச்சு மட்டுமல்ல‌
மூச்சுமில்லை

திசை திரும்பியிருந்த‌
உன் முகத்தையே
விழிகளசைவின்றி
நான்
வியந்து கொண்டிருந்தேன்

என்னை உனக்குத்
தெரிவிக்கச் சொல்லி
இரைந்து கொண்டிருந்தது மனம்
சுற்றம் சூழல்
உறவுகள் பார்த்து
சும்மா இரு என்றது
புத்தி

இதயமும் மூளையும்
இட்டுக் கொண்ட‌
சண்டைகளில்
இளைத்துக் குறுகியது
என் உடல்தான்

அதன் பின்
இன்று
மூன்று வருடங்களை
முழுதாய்க் கடந்த பின்னும்
நான் கட்டிய கனவுகளை
உன் காதுகளில்
போடமுடியவில்லை

உன்னைப் பார்த்த பின்பு தான்
பூமி என்ற இந்த‌
பெரும் பரப்பு
ஒரு பெரிய‌
பொருள் படர்ந்த‌
ஓவியம் என்பதைக்
கண்டு கொண்டேன்

கண்கள் பதிக்காமல்
நான் தினம்
கடந்து செல்லும்
பெயர் தெரியாத‌
அந்தப் பெரிய மரமதை
நாணித் தலைகுனியும்
கர்ப்பிணிப் பெண்
ஒருத்தியாய்
நான்
கண்டு கொண்ட பொழுதில்
உன்னையே அதன்
காரணமாய்
உவகை கொண்டேன்

விளக்குக் கம்பங்கள் கூட‌
வித்தியாசங்கள் காட்டின‌
ஒளிர்ந்தவைகள்
உள்ளவர்களாயும்
இருண்டவர்கள்
ஏங்குபவர்களாயும்
எங்கும்
எதிலும்
அர்த்தப் பூக்களே
அர்ச்சனைகள் செய்தன‌

இரைச்சல்களில்
நகருகின்ற‌
இந்த நகரமும்
இசைக் கருவிகள்
பல சேர்ந்த‌
கூட்டு முயற்சியென்று
எனக்குக்
குறிப்புத் தந்தவளும்
நீ தானே

உப்புக்க‌ரிக்கும்
க‌ட‌லுக்கும்
ம‌திய‌ங்க‌ளில்
ஒரு
ம‌ல‌ர்ச்சி உண்டு
க‌ரும் பாறைக‌ளை
முட்டி வ‌ரும் காற்று
க‌ட‌ல் நீரோடு
க‌ல‌க்கையில்
காத‌லாய் ஒரு
வாச‌ம் விளைகிற‌தே
அதை என்னை
வாசிக்க‌ வைத்த‌வ‌ளும்
நீதானே

அந்த வருடம்
அந்த நாள்
நீ மறந்திருக்கக் கூடும்
அந்தச்
சம்பவச் சலனமின்றி
சங்கீதமாய் எங்கேனும்
நீ
சஞ்சரித்துக் கொண்டிருக்கவும்
கூடும்

இப்பொழுதும்
மதியங்கள்
என்னைக் கடந்தபடிதான்
உள்ளன‌
வியர்வைக் குளியல்களும்
என்னை வெறுத்து
விலகவில்லை
ஆயினும்
அன்று தவறியதை
இன்று சொல்லி வைக்க‌
நீ மட்டும்
இங்கே இல்லை.

December 10, 2009

காதல் வேள்வி (எண்பதுகளின் இறுதியில்)

கேள்விகளின்
வேள்வி இது

விடைகளெதுவுமற்ற
இந்த வேள்வியில்
கரைந்து
மாறுமா உன் மனம்
மறையுமா என்
மனதின் கனம்

தினம் ஒரு
புதுக்குறளாய்
உன் புடவை மடிப்பில்
நாளுமொரு நட்சத்திரம்
உதித்து மிளிர்கிறதே
என் முன்னால்

செவ்வானச் ந்திப்பில்
ஒரு சிற்றாளைப் போல்
உதடுசிவக்கிறஅஸ்தத்தை
ஏழ்மையோடு பார்க்கின்றேன்

இனி
இரவு வரும்
கூடவே
தனிமையும்
ஒட்டி வரும்

இருட்டு ராஜ்ஜியத்தில்
என்
குருட்டு அரசாங்கம்
நிறைகள் நெருங்காத
குறைகளின் தழுவல்களோடு
இன்னொரு முடிவு

நாளும் விடியும் காலை
நாளையும் விடியும்
அப்பொழுதும்
உன் புடவை மடிப்பு
ஒரு நட்சத்திரம்
உமிழும்
எனக்கு மட்டும்
விடையெதுவுமற்ற
வேள்வியே தொடரும்.....

December 8, 2009

போய் வா தாயே!!!!!!!

ஒரு சகோதரியாய், தாயாய் தன் வாழ்நாள் முழுவதும் தன் குடுமபத்துக்கும் அதனை சார்ந்தவர்களுக்குமாய் தன் வாழ்க்கையை அர்பணித்த ஒரு பெண்மணியின் இறுதி சடங்குகளின் பொழுது படிக்கப்பட்ட கவிதாஞ்சலி.

ஒரு தலைமுறைக்கு
வழங்கப்பட்ட வரம்
உன் வருகை.

தாய்மையுடன் தாய் ஒரு
சம்பவம்
தாயாகவே ஒரு தமக்கையார்
அது சரித்திரம்.

கட்டமைப்புகளின்
உறுதியில்
வாழ்க்கை இனிக்கும்
தாய் தந்தை என்ற
தூண்கள்
தவிக்க விட்டு
மறைந்து போனால்
வானம் பார்த்த பூமியாய்
வாழ்வு தொக்கி நிற்கும்.

உன் பருவ வயதில்
உன் முன்னாலும்
கிழித்துப் போடப்பட்ட
எதிர்காலம்
அதை ஒட்டுப் போட
முயன்ற உன்னை
ஊர் பார்த்த பார்வை
பரிதாபம்.

நீ
சுயநலச் சுருக்குகளினுள்
சிக்கியிருந்தால்
இன்று
ஊர் போற்றும்
உன் செல்வங்கள்
யார் யாரோ
எங்கேயோ
எவருக்குத் தெரியும்.

உன் உடன் பிறப்புக்கள்
பிள்ளைகள்
அதன் வம்சங்கள்
அதிஸ்டக்காரர்கள்
வலிகளுடனும்
வாழ்க்கையுடனான
யுத்தங்ளுடனும்
நீ நிலாப்பாட்டுப் பாடி
சோறூட்டியிருக்கிறாயாம்
எனக்குத் தெரியும்
என் வீட்டிலும்
உன் வளர்ப்பில் வந்த பிள்ளையொன்று
எனக்குச்
சிறப்புச் செய்கிறது.

சில பல
பத்து ஆண்டுகளுக்கு முன்
உன் சகோதர சகோதரிகளை
தாய் தகப்பனை விழுங்கியவர்கள் என்றார்களாம்
உண்மையை இன்று தான்
ஊரறியும்.

அவர்கள் தாயை
இழந்தது அப்பொழுதிலல்ல
இப்பொழுதுதான்.

நீ கடவுளால்
பூமியில் வீசப்பட்ட
விதை
ஆல மரமானாய்.

உன் விழுதுகள்
வளர்ந்தன.

அந்த விழுதுகளுக்கும்
இன்று வேர்கள்.

இனி அந்த
வேர்களிலிருந்தும்
விருட்சங்கள்.

இனி வரும்
தலைமுறையிலும்
என்றென்றும்
உன் பெயர்
இருக்கும்.

உன் வருகைக்கும்
அந்த வருகையினால்
இந்த வாழ்க்கைக்கு
நீ
செய்து விட்டு சென்றுள்ள
பெருமைகளுக்கும்
என்றென்றும் நன்றி.


போய் வா தாயே!!!!.